கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து கர்நாடகா மாநில பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய அம்மாநிலத்தின் பிரதான கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. அதே நேரம் கூட்டணி குறித்த பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 189 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் புதியவர்கள் 52 பேர் இடம் பெற்றுள்ளனர். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவன் தொகுதியில் போட்டியிட உள்ளார்.