கர்நாடகாவில் கரோனா சிகிச்சை கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார் குமாரசாமி.
கர்நாடக மாநிலத்தில் கரோனா உபகரணங்கள் வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி எந்தப் புகாரும் அளிக்கவில்லை. அதேபோல பா.ஜ.க.வும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பெரிதாகக் கருத்து கூறவில்லை. இந்நிலையில் இரண்டு கட்சிகளின் இவ்விதமான போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி, "ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் புகார் கூறும் காங்கிரஸ், இதுவரை எந்த ஒரு விசாரணை அமைப்பிடமும் புகார் அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக தங்களை விளம்பரப்படுத்த மட்டுமே இதனைப் பயன்படுத்துகிறது.
அதேபோல், காங்கிரஸின் புகார் அடிப்படையில், ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, தங்கள் நேர்மையை நிரூபிப்பதற்குப் பதிலாக மோசடியை ஒத்துக் கொள்வது போல் பா.ஜ.க. அரசு அமைதியாக இருக்கிறது. பொதுவெளியில் இதுபோன்ற அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டு இரு கட்சிகளும் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றன. கரோனா சிகிச்சை கருவிகள் கொள்முதலில் ரூ.2,000 கோடி முறைகேடு என்ற காங்கிரஸின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த அரசு ஏன் உத்தரவிடவில்லை..? இதுதான் முதல்வர் எடியூரப்பாவின் தலைமைப் பண்பா..? இதில் இரு கட்சிகளும் விளம்பரம் மட்டுமே தேடிக்கொள்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.