நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கோபால் நாத். கொல்கத்தா ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வந்த கோபால் நாத், கொல்கத்தா நீதிமன்றத்தின் 8வது பெஞ்ச் நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்படி, நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியாக கோபால் நாத் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை 7 மணியளவில் நீதிமன்ற ஊழியர்கள் வளாகத்தை திறந்த போது அங்கு நெற்றியில் துப்பாக்கிச் சூடு காயத்துடன் நாற்காலியில் அமர்ந்திருந்தபடி கோபால் நாத் இருந்துள்ளார். இதனை கண்ட ஊழியர்கள், கோபால் நாத்தை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோபால் நாத்தின் உடலுக்கு அருகில் துப்பாக்கி ஒன்று கிடந்ததால் அதனையும் மீட்டு, இது கொலையா அல்லது தற்கொலையா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.