Skip to main content

பினராயி விஜயன் அமைச்சரவை: அதிர்ச்சியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

Published on 18/05/2021 | Edited on 18/05/2021

 

PINARAYI VIJAYAN

 

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல், மார்ச் மாதம் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதனைத் தொடந்து, மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றியது.

 

இதனைத் தொடர்ந்து, பினராயி விஜயன் வருகிற 20ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த அமைச்சரவையில் 21 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனோடு சேர்த்து 12 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இடம்பெறவுள்ளதாகவும், மீதமுள்ள இடங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தநிலையில், முதல்வர் பினராயி விஜயனை தவிர, கடந்தமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அமைச்சராக இருந்த யாரும் இந்தமுறை அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள் என்றும், இது கட்சியின் முடிவு என்றும் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஏ.என். சாம்சீர் தெரிவித்துள்ளார்.

 

இதன்மூலம் கடந்தமுறை கேரள சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற ஷைலஜா டீச்சருக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை என தெரியவந்துள்ளது. புகழ்பெற்ற அமைச்சரும், இந்த சட்டமன்றத் தேர்தலில் கேரள வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வென்றவருமான ஷைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடமில்லாதது பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. ஷைலஜா டீச்சர், அரசு கொறடாவாக தேர்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்