ஒடிசா மாநிலம், கியாஜ்ஹர் மாவட்டத்தில் உள்ள சரசபசி கிராமத்தைச் சேர்ந்தவர் சாரதா (70). தனது கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி சரசபசி கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். சாரதா, தனது மூத்த மகனான கருணாவின் வீட்டில் தான் வசித்து வருகிறார். அதே வேளையில், அண்மையில் தான் மூத்த மகன் கருணா உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சாரதாவின் இளைய மகனான சஸ்துருகன், அதே கிராமத்தில் தோட்டம் ஒன்றை வைத்து அதில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். இந்த நிலையில், சாரதா நேற்று (25-12-23) தனது இளைய மகனின் தோட்டத்தில் இருந்து சமைப்பதற்காக காலிபிளவரை எடுத்திருக்கிறார். இதனை கண்டு ஆத்திரமடைந்த சஸ்துருகன், தனது தாய் என்று பாராமல் அவரை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, சாரதாவை இழுத்துச் சென்று அருகில் இருந்த மின் கம்பத்தில் வைத்து கட்டி அடித்துள்ளார்.
இதையறிந்த சாரதாவின் மூத்த மருமகள், சஸ்துருகனை தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரம் அடங்காத சஸ்துருகன், அவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த ஊர் பொது மக்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாரதாவுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைய மகன் சஸ்துருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.