கடந்த டிசம்பர் 25-ம் தேதி அன்று கேரளாவின் கோழிக்கோடு அருகில் உள்ள கொயிலாண்டிப் பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரம், நகரின் பெரிந்தல் மண்ணாவை ஏரியாவின் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்களும் சபரிமலை தரிசனத்திற்காகப் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அந்தசமயம் சன்னிதானத்திலிருந்த பரிவார் அமைப்புகள் மற்றும் பெண் எதிர்ப்பாளர்கள் ஆகியோர் சரண கோஷம் பாடி அவர்களைத் தடுத்தார்கள். ஆலயப் பிரவேசம் போக விடாமல் ஆர்ப்பாட்டம் நடத்த, பின் வாங்கிய போலீஸ் பிந்துவையும் கனகதுர்காவையும் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பினர். நாங்கள் மீண்டும் வருவோம் என்று அவர்கள் அப்போதே சொல்லிவிட்டுத்தான். போனார்கள். அது வழக்கமான பேச்சுத்தானே என்று சபரிமலை போராட்டக்காரர்கள் அலட்சியப்படுத்தவில்லை.
ஜன 1-ம் தேதி அன்று நள்ளிரவு சபரிமலை செல்வதற்கு வந்த பிந்துவும், கனகதுர்காவும், நிலக்கல்லில் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்கள். பக்தர்களைப் போன்று கருப்பு உடையில் வந்த அவர்களை, சீருடையில்லாத மப்டி போலீசார் பாதுகாப்புடன் இரவு 3.00 மணிக்கு சபரிமலை சன்னிதானத்திற்கு, ஆலய ஊழியர்கள் செல்லும் பாதை வழியாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த சமயம் அங்கிருந்தவர்கள் எதிர்ப்புக் காட்டவில்லையாம். 5 நிமிடம் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அப்போது நள்ளிரவு மணி 3.38க்கு, ‘அதிகாலை 1.30 மணிக்கு நாங்கள் பம்பை சென்ற பிறகு போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். பாதுகாப்பு தரா விட்டாலும், ஆலயம் செல்வோம் என்று சொன்ன பிறகே போலீஸ் பாதுகாப்புக்காக வந்தார்கள். அதன்பின் அங்குள்ள வி.வி.ஐ.பி.க்கள் பாதை வழியாக சென்றோம் யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், 18 படி ஏறவில்லை. தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினோம்' என்றார் பிந்து.
இதன் பின், இது பிரச்சனையாகலாம் என்பதால், போலீஸ் அவர்களை தங்களின் கஷ்டடியில் ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கத் தொடங்கியிருக்கிறது. பெண்களின் ஆலயப் பிரவேசம் பற்றிய விஷயம் வெளியேறிய மறு நொடி, சபரிமலை போராட்டக்காரர்கள், பா.ஜ.க.வினர் பந்த் அறிவித்தார்கள். இன்று அதிகாலையிலேயே பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. கேரளாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கோட்டயம் நகரில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒரு எஸ்.ஐ, ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தனர். கொல்லம் நகரில் அரசு பேருந்துகள் கல்வீச்சில் நொறுக்கப்பட்டன. டயர்களில் தீவைத்து தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். கேரளாவில் பீதியும் பதற்றமும் பற்றியிருக்கிறது. கேரள பார்டர்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.