புதுச்சேரி ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் பார்வதி காந்தராஜ்(25), தனியார் பள்ளி தாளாளர். இவரது கணவரான முன்னாள் எம்.எல்.ஏ தன.காந்தராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அவர்கள் புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், பார்வதி தனியாக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அதனால் ஜீவானந்தம் வீதியில் உள்ள வீடு மற்றும் ஏனாம் வெங்கடாசலபிள்ளை தெருவில் உள்ள மற்றொரு வீடு என இரு வீடுகளையும் புதுச்சேரி வினோபாநகரை சேர்ந்த தனது ஓட்டுநரான எட்வர்டு(40) என்பவரிடம் பராமரிப்பு பணிக்காக ஒப்படைத்துள்ளார். இவர் தனது நகைகளை ஒரு இரும்பு பெட்டியில் வைத்திருக்கிறார்.
2019ல் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பார்வதி சமீபத்தில் இரும்பு பெட்டியில் வைத்திருந்த நகைகளை சரி பார்த்துள்ளார். அப்போது அதிலிருந்த சுமார் 25 லட்சம் மதிப்பிலான 60 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக தனது வீட்டுக்குச் சென்று உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் விசாரித்த பின் எட்வர்ட் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பார்வதி இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் ஓட்டுநர் எட்வர்ட் மீது வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகிச்சையில் இருந்தபோது வெங்கடாசலப்பிள்ளை வீதியிலுள்ள வீட்டில் பார்வதி காந்தராஜ் இருப்பு பெட்டியைப் பற்றி அறிந்த எட்வர்ட் அந்த இரும்புப் பெட்டியின் அசல் சாவியை எடுத்து கள்ளச்சாவி தயாரித்து அதில் இருந்து 60 பவுன் நகைகளை எடுத்து விட்டதாக பார்வதி குற்றஞ்சாட்டுகிறார். போலீஸ் விசாரணையிலேயே உண்மை வெளிவரும்.