Skip to main content

விமான நிலைய விரிவாக்க பணிகள்; போராட்டம் தற்காலிகமாக வாபஸ்!

Published on 17/11/2024 | Edited on 17/11/2024
Airport expansion works struggle temporarily withdrawn

மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையாகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக வீடுகளைக் கையகப்படுத்துவதற்காக 90க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த நான்கு நாட்களாகச் சின்ன உடைப்பு என்ற கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் வாழ்வாதாரத்திற்கான மீள் குடி அமர்வு மற்றும் 3 செண்ட் நிலம் வழங்கப்பட்ட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் சுமார் 136 பேருக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு அதிகாரிகள் இன்று (17.11.2024) பொக்லைன் வாகனங்களுடன் வருகை தர இருந்தனர்.

இத்தகைய சூழலில் தான் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னடைப்பு கிராமத்தைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் எனப் பலரும் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்ளுவோம் எனவும் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து அங்குள்ள சாலைகளில் அப்பகுதி மக்கள் அமர்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நலன் கருதி 1000க்கும் மேற்பட்ட போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஏராளமான பெண்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 3 பெண்கள் மயக்கமடைந்தனர். இதனையடுத்து அங்குத் தயாராக இருந்த  ஆம்புலன்ஸ் வாகனத்தில் 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதோடு போராட்டக் களத்திலேயே சமையல் செய்வதற்கான பொருட்களையும் கிராம மக்கள் கொண்டு வந்திருந்தனர்.  தங்களது கோரிக்களை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் எனவும்  கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர். அதே சமயம் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மண்ணெண்ணெய் கேன்களுடன் ஏறி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்துவிடுவோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Airport expansion works struggle temporarily withdrawn

இந்நிலையில் கிராம மக்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு ஏற்கனவே உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் இழப்பீடு கேட்டு எந்த மனுவும் அளிக்கவில்லை. நிலத்தை காலி செய்ய 6 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டத்தால் கிராம மக்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்