மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையாகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த நான்கு நாட்களாகச் சின்ன உடைப்பு என்ற கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் வாழ்வாதாரத்திற்கான மீள் குடி அமர்வு மற்றும் 3 செண்ட் நிலம் வழங்கப்பட்ட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிராமத்தில் சுமார் 136 பேருக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு அதிகாரிகள் இன்று (17.11.2024) பொக்லைன் வாகனங்களுடன் வருகை தர உள்ளனர். இத்தகைய சூழலில் தான் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னடைப்பு கிராமத்தைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் எனப் பலரும் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்ளுவோம் எனவும் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து அங்குள்ள சாலைகளில் அப்பகுதி மக்கள் அமர்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு நலன் கருதி 1000க்கும் மேற்பட்ட போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.