கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.
இதன்தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தசூழலில் கல்லூரி ஒன்றில் காவி துண்டு அணிந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட, மற்றொரு தரப்பு ஜெய் பீம் என முழக்கமிடும் காணொளி வெளியானது.
அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹு அக்பர் என கோஷமிடுவது, சிவமொக்கா பகுதி கல்லூரி ஒன்றில் தேசிய கோடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது, ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே ஹிஜாப் விவகாரத்தில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அம்மாநில கல்லூரிகளுக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளித்து நேற்று உத்தரவிட்டார். இந்தநிலையில் பெங்களூரில் உள்ள பள்ளிகள், பல்கலை முன் கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களின் வாயிலிலிருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் அனைத்து வகையான கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் கர்நாடக காவல்துறை தடை விதித்துள்ளது.
அதேநேரத்தில் ஹிஜாப் தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நேற்றும், இன்றும் விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கிருஷ்ண தீட்சித், வழக்கின் விசாரணையை கூடுதல் அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். இந்தச்சூழலில் கடந்த ஞாயிற்று கிழமை உடுப்பி மாவட்டத்தின் குந்தாப்பூர் பல்கலைகழக முன் கல்லூரியில், கொடிய ஆயுதங்கள் கொண்டுவந்ததற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அங்கு கத்தியை காட்டி மிரட்டிய மூவர் தப்பி ஓடினர். இந்தநிலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் இல்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.