கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கூட்டணி கட்சியில் இருந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்து, ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேருடன் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று கூடிய கர்நாடக சட்டப்பேரவையில், பாஜக கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கோரி சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கடிதம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் 18-ம் தேதி (வியாழக்கிழமை) அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும் முதல்வர் குமாரசாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்குமாறு சபாநாயகர் அறிவுறித்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.