சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களுக்கும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி சபரிமலை கோவிலுக்குள் கனகதுர்கா மற்றும் பிந்து என்ற இரு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து கனகதுர்கா அவரது வீட்டில் இருந்த போது அவரது உறவினர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரை, 'கோயிலுக்குள் நுழைந்து சடங்குகளை மாற்றியா காரணத்தால் அனைவர் முன்னிலையிலும் பொது இடத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டும்' என கூறி அவரது குடும்பத்தாரே விரட்டியடித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒரு விடுதி ஒன்றில் தற்போது கனகதுர்கா குடியேறியுள்ளார்.