தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது பெங்களூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள் என பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், இந்தக் கனமழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 8 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பெங்களூரில் பெய்து வரும் இந்த கனமழையால் அங்குள்ள 226 பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கர்நாடக இயற்கை பேரிடர் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. அதே சமயம், மழை இனிமேல்தான் அதிகரிக்கும் என்ற நிலையில், அதற்குள் ஏற்பட்ட இத்தகைய பாதிப்புகளால் கர்நாடக மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
இதையடுத்து, பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியில் பிரபலமான நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடை தாழ்வான பகுதியில் இருக்கிறது. இதனால் இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நகைக்கடைக்கு அருகில் நீர் தேங்கி இருந்திருக்கிறது. வழக்கம்போல் தேங்கிய நீர் வடிந்துவிடும் என நினைத்துக் கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மழை வெள்ளம் வேகமாக கடைக்குள் புகுந்துள்ளது. அதே நேரத்தில் கனமழை மேலும் அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது.
இத்தகைய சூழலில் அந்த கடைக்குள் ஏராளமானோர் இருந்த போதிலும் நகைக்கடைக்குள் புகுந்த வெள்ள நீர் மிக வேகமாக, ஒட்டுமொத்த நகைகளையும் அடித்துச் சென்றிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்த நிலையில் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதும் என ஒதுங்கி நின்றுள்ளனர்.
இதையடுத்து மழை வெள்ளத்தின் வேகம் குறைந்தபிறகு அந்த நகைக்கடை ஊழியர்கள் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீரில் மீன் பிடிப்பதைப் போல் தடவித் தடவி சில நகைகளை எடுத்துள்ளனர். ஆனாலும் கடையில் வைக்கப்பட்டிருந்த 80 சதவீத நகைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அதன் மதிப்பு சுமார் இரண்டரை கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.