ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கி புதிய சட்டதிருத்தத்தை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. மேலும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா கேட்ட கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. 1984-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஆக்ரோஷமான உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் முடிவில் அப்போதைய மத்திய அரசிற்கு சில முக்கியமான கேள்விகளை முன்வைத்தார் அவர்.
அவரது அந்த உரையில், "எனக்கு முக்கியமான இரு கேள்விகள் இருக்கின்றன. முதலாவதாக, ஜம்மு-காஷ்மீர் அரசைக் கலைத்துவிட்டு அங்கு ஆளுநர் ஆட்சியைக் அமல்படுத்துவதுதான் தான் மத்திய அரசின் திட்டமா? இரண்டாவதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு அதனை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏன்? அதை இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட வரையறைக்குள் ஏன் கொண்டுவரக் கூடாது?’’ எனக் கேள்வி எழுப்பினார்.
1984 க்கு பிறகு மத்தியில் பல ஆட்சிகள் மாறிய பின்னர் தற்போது ஜெயலலிதாவின் இந்த கேள்விகளுக்கான பதிலை, சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் மத்திய அரசு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.