ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவிற்கும், காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் மசோதாவிற்கும், மத்திய அரசுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் நாட்டு நலன் சார்ந்த விஷயம் என்பதால் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது.
அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தனது ராஜ்ய சபா எம்.பி பதவியை ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு நேரடியாக தனது ஆதரவை தெரிவித்துக்கொண்டார். அதே போல் பிற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற காரணமானவர் சிந்தியா. பா.ஜ.கவின் நெருக்கடியான போட்டிக்கு மத்தியில் காங்கிரசுக்காக கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி கடினமான போட்டியை கொடுத்து காங்கிரஸ் கட்சியை வெற்றியடைய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.