குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜக, 6-வது முறையாகவும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தீவிரப் பிரச்சாரம் மற்றும் பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது. மறுமுனையில், இழந்த தங்களது கௌரவத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆம் ஆத்மியின் வருகையால் இருமுனைப் போட்டியாக இருந்த குஜராத் தேர்தல் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இதனிடையே 166 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டங்களாக பாஜக வெளியிட்டுள்ள நிலையில் ஜாம்நகர் தொகுதியில் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில், மனைவிக்காக பிரச்சாரப் பணிகளில் இறங்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஜடேஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது, “குஜராத்தில் பேரவைத் தேர்தல் டி20 கிரிக்கெட் போட்டி போல் உள்ளது. பாஜக வேட்பாளராக என் மனைவி அரசியலில் நுழைகிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவி ரிவாபா பிரதமர் மோடியின் வழியைப் பின்பற்றி அரசியலுக்கு வந்திருக்கிறார். மேலும், அவரது கொள்கைகளைப் பின்பற்றி மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார். அவருக்கு எப்போதுமே பிறருக்கு உதவும் குணம் அதிகம். முதல்முறையாக அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன்மூலம் அவர் அதிகம் கற்றுக்கொள்வார். அதனால் உங்கள் ஆதரவு அவருக்கு எப்போதும் தேவை” என்றார்.