
தனது 4 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டம் மன்பூர் சச்சாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜீவ் (36). இவரது திருமணமாகி சும்ரிதி (12), கீர்த்தி (9), பிரகதி (7) ஆகிய 3 பெண் குழந்தைகள், ரிஷப் (5) என்ற ஆண் குழந்தை என மொத்தம் 4 குழந்தைகள் இருந்தனர். சம்பவம் நடந்த முந்தைய நாளன்று ராஜீவ்வின் மனைவி, தனது வீட்டிற்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று காலை ராஜீவ்வின் அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவருடைய தந்தை, அறை கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. இதில் சந்தேகமடைந்த அவர், மாடியில் ஏறி படிக்கட்டு மூலமாக வீட்டிற்குள் வந்தார். அங்கு, 4 குழந்தைகளின் கழுத்துகளிலும் கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டு இறந்து கிடந்ததையும், பக்கத்து அறையில் ராஜீவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இச்சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்த கிடந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓராண்டுக்கு முன்பு விபத்தில் சிக்கிய ராஜீவ்வுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அந்த காயங்கள், அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது 4 குழந்தைகளின் கழுத்திலும் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.