
சென்னை கிண்டியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாடு இன்று தொடங்கியது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவரது உரையில், ''இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல எல்லோரையும் உள்ளடக்கிய சமூக வளர்ச்சியையும் தமிழகம் மேற்கொண்டு வருகிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்த மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்புக் கூட்டலில் தமிழ்நாடு 12.11 விழுக்காடு பங்களிப்பு செய்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு 8 விழுக்காட்டிற்கு அதிகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் உடைய வளர்ச்சி தனித்தன்மை வாய்ந்தது. இந்த வளர்ச்சியை மேலும் மேம்படுத்துகின்ற வகையில் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற உயரிய இலக்கை நிர்ணயித்து அந்த பாதையில் பயணித்து வருகிறோம். பொருளாதார வளர்ச்சி மட்டும் அல்ல எல்லோரையும் உள்ளடக்கிய சமூக நீதியும் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் உள்ளிட்ட கொள்கையில் அடித்தளமாகக் கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சியே எங்களுடைய இலக்காகக் கொண்டிருக்கிறோம். இதனால் தான் தமிழ்நாடு மற்ற மாநிலங்களில் இருந்து தனித்துவமாக இருக்கிறது.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளது. தமிழ்நாடு முழுக்க சீரான மற்றும் பரவலான வளர்ச்சியை கொண்டு வர நாங்கள் எடுத்துக் கொண்டு வருகின்ற முயற்சிகள் பயனளித்து வருகிறது. கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்கள் மாநில பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. அதுவும் கடந்த 11 மாதங்களில் 12.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறோம்'' என்றார்.