
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் சிறையில் அடைத்துவிடுவதாக மனைவி அடிக்கடி மிரட்டி வருகிறார் என்று குடும்ப நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார்.
அவர் அளித்த அந்த மனுவில், ‘எனது மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து எனது திருமண வாழ்க்கையில் தலையிடுகிறார். 2010ஆம் ஆண்டில், எனது மனைவி வீட்டை விட்டு வெளியே அவரது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மேலும், எனது மனைவி தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி மிரட்டுகிறார். ஒரு முறை தற்கொலை முயற்சியும் அவர் செய்தார். என் மீது எனது குடும்பத்தினர் மீதும் பொய்யான புகார்கள் கொடுத்து சிறைக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறார். எனவே, இந்த திருமணத்தை கலைத்து விவாகரத்து கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த குடும்ப நீதிமன்றம், தம்பதியினரின் திருமணத்தை கலைத்து விவாகரத்து வழங்க உத்தரவிட்டது.
இருந்த போதிலும், குடும்ப நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை மீதான விசாரணை, நீதிபதி ஆர்.எம்.ஜோஷி அமர்வு முன்பு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குடும்ப நீதிமன்றத்தில் கணவர் மற்றும் பிற சாட்சிகள் சமர்ப்பித்த ஆதாரங்கள், நிரூபிக்கப்பட்டுள்ளது. மனைவியின் இத்தகைய செயல், விவாகரத்துக்கான அடிப்படையாக மாறும் அளவுக்குக் கொடுமைக்குள்ளானது. வாழ்க்கைத் துணை தற்கொலைக்கு மிரட்டல் விடுப்பது அல்லது தற்கொலைக்கு முயற்சிப்பது என்பது கொடுமைக்கு சமம். மேலும், இதுது விவாகரத்துக்கான செல்லுபடியாகும் காரணம் ’ என்று கூறி குடும்ப நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்தார்.