ஜம்மு&காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பிப்ரவரி -26 ஆம் தேதி பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் அமைந்துளள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதலை நடத்தியது. பிறகு இந்தியா சார்பில் அளித்துள்ள விளக்கத்தில் விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை உயிரிழந்துள்ளனர் என அறிவித்தது. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இத்தாலி பத்திரிக்கையாளர் பிரான்செஸ்கா மரினோ இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து சில தகவல்களை வெளியிட்டார்.
அதில் இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 130 பேர் முதல் 170 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். அதே போல் காயமடைந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகவும், உயிரிழந்த தீவிரவாதிகளில் 11 பேர் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பவர்கள் என்று மரினோ கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பாலகோட் மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் தீவிரவாத பயிற்சி முகாம் இறங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நானே முழுக்க முழுக்க செய்திகளை சேகரித்ததாக பத்திரிகையாளர் மரினோ தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக ஐநா சபை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.