வாட்ஸ்அப் நிறுவனம், சமீபத்தில் தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இது பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான செயல் என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களைப் பாதுகாக்கும் என தெரிவித்ததோடு, புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டாலும் அவர்களின் கணக்குகள் முடக்கப்படாது எனவும், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்துள்ள மாற்றம் குறித்து இந்திய நாடாளுமன்றம் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகிவுள்ளது. வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, தகவல் தொழிற்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பேஸ்பூக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.