மராத்தா இடஒதுக்கீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு 2018ஆம் ஆண்டு செய்த சட்டத் திருத்தத்தின்படி, ஓபிசி பட்டியலில் சாதிகளை இணைக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இல்லை எனத் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, ஓபிசி பட்டியலில் சாதிகளை இணைக்கும் அதிகாரத்தை மத்திய அரசு மீண்டும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கும் சட்டத் திருத்த மசோதா உருவாக்கப்பட்டு, அது கடந்த ஒன்பதாம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இந்த ஓபிசி சட்டத் திருத்த மசோதா, கடந்த 10ஆம் தேதி மக்களவையிலும், 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்போடு நிறைவேறியது.
இதனையடுத்து இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று (20.08.2021) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த ஓபிசி சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே நிறைவேறிய பொது காப்பீடு வணிகம் (தேசியமயமாக்கல்) திருத்த மசோதாவிற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓப்புதல் அளித்துள்ளார்.