Skip to main content

ஏழு நாட்களுக்குள் உரிய பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை - வாட்ஸ்அப்பிற்கு இந்திய அரசு நோட்டீஸ்!

Published on 19/05/2021 | Edited on 19/05/2021

 

whatsapp

 

வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இதற்கு வாட்ஸ்அப் பயனர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

 

இதனையடுத்து வாட்ஸ்அப், தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவந்த மாற்றத்தை அமல்படுத்துவதை மே 15ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தது. இதன் தொடர்ச்சியாக மாற்றப்பட்ட வாட்ஸ்அப்பின் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகள் கடந்த 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.'

 

இந்நிலையில், சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் செய்யப்பட்ட மாற்றங்களைத் திரும்பப் பெறுமாறு ஏற்கனவே இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்பை வலியுறுத்தியிருந்த நிலையில், மீண்டும் அந்த அமைச்சகம் வாட்ஸ்அப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் இதுகுறித்து அந்த வட்டாரங்கள், "வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கை எவ்வாறு இந்திய அரசியல் சட்டத்தின் பல பிரிவுகளை மீறுகிறது என்பதை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கொண்டு சென்றுள்ளது. தற்போது அனுப்பப்பட்டுள்ள நோட்டீசுக்குப் பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து திருப்தியான பதில் கிடைக்காவிட்டால், சட்டத்திற்கு உட்பட்டு வாட்ஸ்அப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்