ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது குடிமக்களை அந்தநாட்டிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு ஏற்கனவே அறிவித்திருந்தபடி அமெரிக்காவின் படைகளும், அமெரிக்காவின் கூட்டணி நாட்டு படைகளும் ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறின.
அதேநேரத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் குடிமக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். இந்தசூழலில் கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்கள் விரைவாக நாடு திரும்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிற்கான எதிரான நடவடிக்கைகளுக்காகவும், தீவிரவாதத்திற்காகவும் ஆப்கானிஸ்தான் எந்த விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என்ற இந்தியாவின் கவலையை தீபக் மிட்டல் எழுப்பியதாகவும், அதற்கு ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாய், இந்த விவகாரங்கள் சாதகமான முறையில் தீர்க்கப்படும் என உறுதியளித்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.