சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.
சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.
அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.
இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.