மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக 'சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்' அமெரிக்க அரசாங்கத்திடம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்துள்ளது மத்திய மோடி அரசு.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் அமைச்சர் அமித்ஷா. மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விரைவில் சட்டமாகும். இந்த நிலையில், அமித்ஷா கொண்டு வந்துள்ள சட்டமசோதாவுக்கு எதிராக, அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் என்கிற யூ.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப். குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்த கோரிக்கை மனுவில், "மத ரீதியாக மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தவறு. அந்தச் சட்டம் தவறான பாதையில் செல்கிறது. எப்போதும் இந்தியா இப்படி மதத்தை அணுகியது இல்லை. தற்போது நிலைமை இந்தியாவில் மோசமாகியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "அமெரிக்க ஆணையம் எங்களுக்கு எதிராக கோரிக்கை வைத்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
அவர்களின் கடந்த கால செயல்பாடு எப்படிப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். ஒரு தரப்பு கருத்துக்களை கேட்பதும், ஒரு பக்க நிலைப்பாட்டை எடுப்பதும் தான் அந்த ஆணையத்தின் நிலைப்பாடு. அந்த ஆணையம் நிறைய தவறுகளை செய்திருக்கிறது. இந்தியா குறித்தும், இந்த சட்டத்தைப் பற்றியும போதிய அறிவு அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. குடியுரிமை சட்டம் குறித்து ஆணையம் சொல்லிய எதுவும் உண்மையும் இல்லை; சரியானதும் இல்லை. குடியுரிமைச் சட்ட திருத்தத்தால் இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் அவர்கள் தலையிட கூடாது" என தெரிவித்துள்ளது.