பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றிபெற்றால், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஐ.சி.எம்.ஆர். திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவில் 6.2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்த கரோனா தடுப்பு மருந்தான "கோவாக்ஸின்" எனும் மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இதன் பரிசோதனை வரும் ஜூலை ஏழாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பல்ராம் பார்கவா சமீபத்தில் எழுதிய கடிதத்தில், பரிசோதனை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் பரிசோதனை வெற்றியடைந்தால், ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்குள் தடுப்பு மருந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.