மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 52 வயது பெண். இவர், தனக்கு சொந்தமான நிலம் ஒன்றை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக தனது கணவருடன் கோஹாட்டில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கடந்த 6 மாதங்களாக அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் தனது கணவருடன் தாசில்தார் அலுவலகத்திற்கு அந்த பெண் வந்துள்ளார். அப்போது, வருவாய்த்துறை ஊழியரான நேவல் கிஷோர் கவுட் என்பவர், அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அவர், தனது காலணிகளை எடுத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், அதிகாரி நேவல் கிஷோர் கவுட் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.