2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூரில் போலீசார் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. பிடிவாரண்டை ரத்து செய்வது குறித்து சீமான் தரப்பு மீண்டும் விக்கிரவாண்டி நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை பிப். 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.