டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி வெற்றிப் பெறுவதற்காக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற, அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசினார். அப்போது அவர், “சீதையை கவனித்துக் கொள்ளும்படி, சகோதரர் லட்சுமணனிடம் கேட்டுவிட்டு, ராமர் காட்டுக்குள் உணவு ஏற்பாடு செய்யச் சென்றார். பின்னர், ராவணன் ஒரு தங்க மான் வேடத்தில் வந்தான். சீதை லட்சுமணனிடம் அந்த மான் வேண்டும் என்று சொன்னாள். லட்சுமணன் ஆரம்பத்தில் மறுத்தான், ஆனால் பின்னர் மானை தேடிச் சென்றான். பின்னர் ராவணன், தன் வடிவத்தை மாற்றி சீதையைக் கடத்தினான். இந்த பாஜக தலைவர்கள் அந்த தங்க மான் போன்றவர்கள். அவர்களின் வலையில் சிக்காதீர்கள்” என்று கூறினார்.
ராமாயணத்தை தவறாக கூறுவதாக பா.ஜ.க, கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கெஜ்ரிவால் இந்து மதத்தை அவமதித்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாகவும் டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா கூறினார். இது குறித்து பேசிய அவர், “ராவணன் எப்போது தங்க மான் வேடமிட்டு வந்தார்? கண்ணாடி மாளிகையில் வசித்த பிறகும் கெஜ்ரிவால் தங்கத்தின் மீது வெறி கொண்டுள்ளார். தேர்தலுக்கு முன்பே அவர் ஒரு கருத்துக்கணிப்பு இந்துவாக மாறிவிட்டார். ஆனால் அதற்காக அவர் எங்கள் நம்பிக்கையை கேலி செய்ய முடியும் என்று அர்த்தமல்ல. நாங்கள் டெல்லி மக்களுக்காகவும் எங்கள் இந்து மதத்திற்காகவும் உண்ணாவிரதம் இருக்கிறோம். கடவுள் ராமர் நீதி செய்வார். இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கெஜ்ரிவாலை இந்து சமூகம் ஒருபோதும் மன்னிக்காது” என்று பேசினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கெஜ்ரிவால், “நான் ராவணனை அவமதித்ததால் பாஜக என் வீட்டிற்கு வெளியே முகாமிட்டுள்ளது. அவர்கள் ராவணனை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்களிடம் பேய்ப் போக்குகள் உள்ளன. டெல்லியில் உள்ள ஏழைகளை நான் எச்சரிக்க விரும்புகிறேன், இவர்கள் வந்தால், அவர்கள் உங்களை பேய்களைப் போல விழுங்கிவிடுவார்கள்” என்று கூறினார்.