Skip to main content

மக்களவையில் 3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றம்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
3 Bills passed in Lok Sabha

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள் தான் இப்போதும் அமலில் உள்ளன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. மேலும், நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று (20-12-23) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமித்ஷா, “விரிவான ஆலோசனைக்கு பிறகு 3 குற்றவியல் மசோதாக்களும் உருவாக்கப்பட்டன. இவற்றை தாக்கல் செய்வதற்கு முன்பு, ஒவ்வொரு கமா, முற்றுப்புள்ளியையும் படித்து பார்த்தேன். இப்போது வரை இங்கிலாந்து அரசு உருவாக்கிய குற்றவியல் சட்டங்களை நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். 

ஆங்கிலேயர் கால குற்றவியல் சட்டங்கள், காலனியாதிக்க மனப்பான்மை கொண்டவை. தண்டிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டவை ஆகும். நீதி வழங்குவதை நோக்கமாக கொள்ளவில்லை. ஆனால், இந்த புதிய குற்றவியல் மசோதாக்கள் இந்திய சிந்தனை அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. முதல் முறையாக மனிதாபிமான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இவை காலனியாதிக்க மனப்பான்மையில் இருந்தும் அதன் அடையாளங்களில் இருந்தும் மக்களை விடுவிக்கும்” என்று பேசினார். 

இதையடுத்து, மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்