கரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் யாருக்கெல்லாம் சோதனைகள் நடத்தப்படும் என்ற புதிய வழிகாட்டுதலை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவிவரும் இந்த கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பரிசோதனை அளவை அதிகரிக்கவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆர்டி-பி.சி.ஆர், ரேபிட் டெஸ்ட் கிட், ஆன்டிபாடி சோதனை முறை உள்ளிட்ட பல்வேறு சோதனை முறைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் யாருக்கெல்லாம் சோதனைகள் நடத்தப்படும் என்ற புதிய வழிகாட்டுதலை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி,
அனைத்து சுகாதார ஊழியர்கள்.
கரோனா அறிகுறி உள்ளவர்கள்
கடந்த 14 நாட்களுக்குள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
கரோனா பாதிக்கப்பட்ட நோயாளியுடன் தொடர்பிலிருந்த நபர்கள்.
கடுமையான சுவாச நோய் உள்ள நோயாளிகள்.
கரோனா பாதிக்கப்பட்ட நபருடன் ஐந்தாவது மற்றும் பதினான்காவது நாளில் நேரடி தொடர்பிலிருந்தவர்கள்.
ஆகியோருக்கு கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17 ஆம் தேதி இரவு 9 மணி வரை 3,18,449 நபர்களிடமிருந்து மொத்தம் 3,35,123 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. இவற்றில் 14,098 பேருக்கு இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.