மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் விமானம் மும்பை உள்ளூர் விமாநிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூருக்கு 166 பயணிகளுடன் விமானம் புறப்படும் போது, விமானத்தின் கேபின் பிரஸ்ஸர் பட்டனை அழுத்தி சரி செய்ய வேண்டும். ஆனால், விமானத்திலிருந்த குழு அதை சரியாக கவனிக்காமல் விட்டதால், விமானம் புறப்பட்ட சற்று நேரத்திலேயே அழுத்தம் ஏற்பட 30 பயணிகளுக்கு காதிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் கசிய ஆரம்பித்தது. மேலும் சிலருக்கு அதிகப்படியான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதல் உதவி செய்து வருகிறோம். 166 பயணிகளையும் மாற்று விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறோம். விமான பயணிகளை அழைத்து சென்ற 5 விமான ஊழியர்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சிகிச்சைக்காக சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஐந்து பயணிகளில் ஒருவர், ”எனக்கு முப்பது லட்சம் பணமும், 100 உயர்வகுப்புக்கான வவுச்சரும் நஷ்ட ஈடாக வேண்டும்” என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். இது சட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் அவரிடம் கேபினட் பிரஸர் பட்டனை சரிபார்க்காத வீடியோ இருக்கிறது. அதனை ஊடகங்களுக்கு தந்துவிடுவேன் என்று மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விபத்துக்கு காரணம் நிறுவனத்தின் மீது சட்டரீதியாகவும் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.