பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று தற்போது துவங்கியுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் 30-05-24 அன்று மாலையுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு என்பது உத்தரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
பிரதமர் மோடி, நடிகை கங்கனா ரனாவத், அனுராக் தாகூர் உட்பட 904 வேட்பாளர்கள் இறுதிக்கட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தலில் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 கோடி பேர் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுள்ளனர். தற்போது பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் அடிப்படை வசதிகளும் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட தேர்தலுக்காக 201 சர்வதேச எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் தேர்தல் ஆணையத்தின் முந்தைய அறிவிப்பின் படி ஜூன் நான்காம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட இருக்கிறது.