ஹைதராபாத்தைச் சேர்ந்த அகஸ்தியா ஜெய்ஸ்வால் என்ற 14 வயது சிறுவன் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒஸ்மானியா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வுமுடிவுகளில் பலரையும் புருவமுயர்த்த வைத்தது அகஸ்தியா ஜெய்ஸ்வால் எனும் 14 வயது சிறுவன்தான்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அகஸ்தியா, சிறுவயது முதலே நன்கு படிக்கக்கூடிய மற்றும் எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ள சிறுவனாக இருந்து வந்துள்ளார். இதன் பலனாக, தனது 9 வயதிலேயே 75 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, 11 வயதில் இடைநிலை இரண்டாம் ஆண்டு தேர்வில் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் அகஸ்தியா. அதன்பிறகு ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் சேர்ந்த அகஸ்தியா, தற்போது தனது 14 -ஆவது வயதில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். சிறுவனின் இந்தச் சாதனைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிறுவன் அகஸ்தியா, "இந்தியாவில் 14 வயதிலேயே பட்டம் பெற்ற முதல் நபர் நான்தான். வருங்காலத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனால் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். குழந்தைகள் அனைவரிடமும் இதேபோல் நிறையத் திறமைகள் இருக்கும். பெற்றோர்கள் அதனைக் கவனித்து ஊக்கப்படுத்தினால் அனைவராலும் வெற்றி பெற முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.