Ramoji Rao passed away Condolences to Prime Minister Modi

ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87) காலமானார். உடல்நலக் குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (08.06.2024) அதிகாலை 03:45 மணிக்கு உயிரிழந்தார். பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, மாநில தலைமைச் செயலருக்கு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். அதில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ரங்காரெட்டி மாவட்டகலெக்டர் மற்றும் சைபராபாத் கமிஷனருக்கு தலைமைச் செயலர் மூலம் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் எனத்தெலுங்கானா மாநில முதல்வர் அலுவலகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

Ramoji Rao passed away Condolences to Prime Minister Modi

Advertisment

அதே சமயம் ராமோஜி ராவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது இரங்கல்களைத்தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமோஜி ராவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன.

அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். நான் அவருடன் பழகி அவருடைய ஞானத்தால் பயனடைந்து பல வாய்ப்புகளைப் பெற்ற அதிர்ஷ்டசாலி ஆவேன். இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.