கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் கர்நாடகா மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை, பாஜக கடத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவகுமார் சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டார். அதே சமயம் பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் திட்டமிட்டு கால தாமதம் செய்வதாக ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என ஆளுநர் வஜூபாய் வாலா, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு வேண்டுகோள் விடுத்தார். அவை நிகழ்வுகளை கண்காணிக்க ஆளுநரின் செயலர் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். ஆளுநர் வஜூபாய் சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "முதல்வர் என்பவருக்கு பெரும்பான்மை எப்போதும் அவசியம்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமார் சட்டப்பேரவையில் வாசிக்க தொடங்கிய போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டன.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்ந்து வரும் நிலையில், இன்று இரவு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா இரவு 12.00 மணியானாலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். கர்நாடக அரசியலில் நீடித்து வரும் குழப்பம், இன்று இரவுக்குள் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.