Skip to main content

'வெளியே வந்த ஹேமந்த் சோரன்'-தமிழக முதல்வர் வரவேற்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
'Hemant Soran who came out'- Tamil Chief Minister's welcome

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ எனச் சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 31 ஆம் தேதி  விசாரணை மேற்கொண்டனர்.

அதேசமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையைக் கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்தது. இறுதியாக ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் இன்று விடுதலையானார். இதனை அவரது கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், 'ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவியை பறித்து சிறையில் அடைத்து பரப்புரை செய்வதை பாஜக அப்பட்டமாக தடுத்தது. ஹேமந்த் அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்