இந்தியாவின் முதல் கரோனா தடுப்பு மருந்தான "கோவாக்ஸின்" எனும் மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்ய ஒப்புதல் பெற்றுள்ளது அதன் தயாரிப்பு நிறுவனம்.
இந்தியாவில் 5.6 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பாரத் பயோடெக் நிறுவனம், ஐ.சி.எம்.ஆர். மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இந்த மருந்து வேலைசெய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றிபெற்ற சூழலில், இதனைக்கொண்டு மனிதர்களுக்குச் சிகிச்சையளிக்கும் சோதனையை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பும் தற்போது அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாதத்தில் இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை நாடு முழுவதும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.