ஹரியானா மாநிலத்தில், வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 90 தொகுதிகள் உள்ள ஹரியானா மாநிலத்தை நயாப் சிங் சனி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அதே சமயம் பா.ஜ.கவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சியும் காய் நகர்த்தி வருகிறது. தேசிய அளவில், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும், ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் தனித்தனியே களம் காண்கின்றன. இந்த தேர்தலை முன்னிட்டு, பல்வேறு கட்சித் தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள சர்க்கி தாத்தி சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமத்தில் வேட்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். இந்த தொகுதியின் கீழ் வரும் சமஸ்பூர் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாகக் குடிநீர் தூய்மை இல்லாமல் இருப்பதாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் கூறி வந்ததாகவும், ஆனால் அதுகுறித்து யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குடிப்பதற்குத் தண்ணீர் விலைகொடுத்து வாங்குவதாகவும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் வாக்குகள் வேண்டும் என்றால் அவர்கள் தரும் தண்னீரை ஒரு கிளாஸ் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இத்தனை வருடங்களாக தாங்கள் குடித்த குடித் தண்ணீரைப் போட்டியிடும் வேட்பாளர்கள் குடிக்க வேண்டும் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று அரசியல்வாதிகளுக்கு ஜெக் வைத்துள்ளனர். வாக்குக்காக அரசியல்வாதிகள் தண்ணீரைக் குடிக்க போகிறார்களா? அல்லது உங்கள் வாக்கே வேண்டாம் என்று கூறி கிராமத்தையே புறக்கணிக்கப் போகிறார்களா? என்று ஒட்டுமொத்த கவனமும் சமஸ்பூர் கிராமத்தை நோக்கி இருக்கிறது.