பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணித பாடத்தில் 2 மதிப்பெண் பெற்ற சிறப்பு மாற்றுத்திறனாளி மாணவி, மறுமதிப்பீட்டில் 100 மதிப்பெண் பெற்றுள்ள சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியானது. இதில் ஹிசாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவி சுப்ரியா, அனைத்துப் பாடங்களிலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளார். ஆனால், கணித பாடத்தில் மட்டும் அவர் 2 மதிப்பெண் பெற்றிருப்பதாக தேர்வு முடிவுகளில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நன்கு படிக்கக்கூடிய மாணவியான சுப்ரியா கணிதத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் எடுத்ததால், சுப்ரியாவின் தந்தை மதிப்பீட்டில் தவறு நடந்திருக்கும் எனக்கூறி மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தார். இதையடுத்து சுப்ரியாவின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்பட்டதில் தற்போது அவருக்கு 100 மதிப்பெண் கிடைத்துள்ளது. ஆசிரியர்களின் தவறான நடவடிக்கையால் மாணவி ஒருவரின் எதிர்காலமே மாறியிருக்கும் எனக்கூறி ஹரியானா பள்ளிக் கல்வி வாரியத்தின் அலட்சிய செயல்பாட்டுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.