உத்தரபிரதேச மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசியில் சில வளர்ச்சி திட்டங்களையே தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கரோனா இரண்டாவது அலையை உத்தரபிரதேச அரசு கையாண்ட விதம் இணையற்றது என தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, கரோனாவை கையாண்டதில் உத்தரப்பிரதேச அரசின் செயல்பாடுகள் வியப்பானதாக இருந்தது. வாரணாசி மட்டுமின்றி மொத்த மாநிலமும் அபாயகரமான மாறுதலுக்குள்ளாகும் வைரஸை முழு பலத்துடன் எதிர்த்தது" என தெரிவித்ததோடு, வாரணாசியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட கரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனைகள் செய்த மாநிலமாகவும், அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட மாநிலமாகவும் உத்தரபிரதேசம் இருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
பிரதமர் தனது உரையின் நடுவே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டினார். "யோகி ஜி கடுமையாக உழைத்து வருகிறார். அவர் தொடர்ந்து இங்கு வருவதை காசி மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்வதோடு, வளர்ச்சி பணிகளை வேகப்படுத்த தனது சக்தியை செலவு செய்கிறார். இதேபோல் ஒட்டுமொத்த மாநிலத்திற்காகவும் பாடுபடுகிறார்" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மோடி., "உத்தரப்பிரதேசத்தில் இன்று சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. ஒருகாலத்தில் கட்டுப்பாட்டை மீறி சென்ற மாஃபியா ராஜ்ஜியமும், தீவிரவாதமும் இன்று சட்டத்தின் பிடியில் இருக்கிறது. பெண்கள் மீது கண்களை உயர்த்தும் குற்றவாளிகள், சட்டத்திலிருந்து தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை அறிவார்கள்" எனவும் கூறியுள்ளார்.