Skip to main content

கணவனுடன் தகராறு; மகனை கால்வாயில் வீசிய தாய் - முதலையால் உயிரிழந்த சோகம்!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
The incident happened because the son was thrown into the canal for quarrels with husband

கர்நாடகா மாநிலம், உத்தரகன்னடா மாவட்டம், ஹலமாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு திருமணமாகி சாவித்திரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு வினோத் (6) என்ற மகன் இருந்தார். வினோத், பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

வினோத் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், ரவிக்குமாருக்கு தனது மகனை பிடிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரவிக்குமார் தனது மனைவி சாவித்திரியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், சாவித்திரி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் (04-05-24) வழக்கம்போல் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சாவித்திரி, தனது மகன் வினோத்தை வெளியே அழைத்து சென்று அங்குள்ள கால்வாயில் தூக்கி வீசி உள்ளார். 

இதனையடுத்து, தனது மகனை கால்வாயில் தூக்கி வீசிய பிறகு வருந்திய சாவித்திரி, இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வினோத்தை போலீசார் நேற்று முன் தினம் இரவு முழுவதும் தேடி வந்தனர். நீண்டு நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று (05-05-24) காலை சிறுவன் வினோத் பிணமாக மீட்கப்பட்டார். 

இதில், மீட்கப்பட்ட சிறுவனின் வலது கை துண்டாகி இருந்ததுடன் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வினோத் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், வாய் பேச முடியாத மகன் சாக வேண்டும் என்று ரவிக்குமார் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சாவித்திரி, தனது மகனை கால்வாயில் தூக்கி வீசி கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும், கால்வாயில் தூக்கி வீசப்பட்ட சிறுவனை, சிறிது நேரத்திலேயே கால்வாயில் இருந்த முதலைகள் கடித்து இழுத்து சென்று கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி சாவித்திரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் - மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலைகள் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்