Skip to main content

பிஎம் கேர்ஸ்: எதெதற்கு எத்தனை கோடி? - செலவு விவரங்கள் வெளியீடு

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

pm cares

 

கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதியம் இருக்கும்போது, இந்த புதிய நிதியம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. மேலும் இந்த பிஎம் கேர்ஸ் நிதியை பொதுக்கணக்கு குழுவால் தணிக்கை செய்யமுடியாது என கூறப்பட்டது. பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிஎம் கேர்ஸ் இணையப்பக்கத்தில், அதன் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 2020 ஆம் நிதியாண்டில் பிஎம் கேர்ஸுக்கு 3,077 கோடி நிதி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் நிதியாண்டில் 7 ஆயிரத்து 679 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

 

மொத்தத்தில் மார்ச் 27, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை 10 ஆயிரத்து 990 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் 495 கோடி வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. மேலும் கடந்தாண்டு மார்ச் 2021 வரை பிஎம் கேர்ஸ் நிதியத்திலிருந்த 10 ஆயிரத்து 990 கோடியில், 3ஆயிரத்து 976 கோடி மட்டும் செலவழிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 14 கோடி செலவழிக்கப்படாமல் இருந்துள்ளது. அதாவது சுமார் 64 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.

 

செலவழிக்கப்பட்ட 3ஆயிரத்து 976 கோடியில், 6.6 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க 1,392 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. 50,000 'மேட் இன் இந்தியா' வென்டிலேட்டர்களை வாங்க ரூ.1,311 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிகளை பரிசோதிக்கும் அரசு நடத்தும் ஆய்வகங்களை மேம்படுத்த 20.41 கோடி செலவிடப்பட்டுள்ளது. பீகாரின் முசாபர்பூர் மற்றும் பாட்னாவில் 2 கரோனா மருத்துவமனைகள் அமைக்க 50 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பி.எம். கேர் நிதி குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

rahul gandhi question asked for pm care fund related issue

 

கொரோனா பெருந்தொற்று  இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக  இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதன் காரணமாக அதனை சரி செய்யும் வகையில் பி.எம். கேர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொரோனா நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும் நிலையில்  பி.எம் கேர் என்று தனியாக ஒன்று எதற்காக என்று ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுமட்டுமின்றி பி.எம் கேர் செயல்படும் முறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பதிவில், "பிஎம் கேர்ஸ் திட்டத்திற்கு தேவையான நிதி பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கப் பெறுகிறது. அதற்கான செலவுகள் குறித்து மத்திய அரசு எந்த கணக்கும் தருவதில்லை. அதில் இருந்து எவ்வளவு தொகை முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் நிதி நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் எங்கே செல்கிறது? இது வரி செலுத்துவோரின் பணம்.

 

அரசு நிறுவனங்கள் மூலம் பிஎம் கேர்ஸ் க்கு இதுவரை 2,900 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இதில் 1,500 கோடி ரூபாயானது ஓஎன்ஜிசி (370 கோடி) , என்பிடிசி (330 கோடி), பிஜிசிஐ (275 கோடி), ஐஓசிஎல் (265 கோடி) மற்றும் பவர் பைனான்ஸ் கமிஷன் (222 கோடி) என 5 முக்கிய நிறுவனங்களிடம் இருந்து கிடைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் யாருடைய வாழ்க்கையை மேம்படுத்த எவ்வளவு நிதி உதவி வழங்கப்பட்டது என்பது குறித்த கணக்கு யாருக்கும் தெரியாது. மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே செல்கிறது" என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

Next Story

இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8013 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 119 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 16,765 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தினசரி கரோனா சதவீதம் 1.11 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1 லட்சத்து 2 ஆயிரத்து 601 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5 லட்சத்து 13 ஆயிரத்து 843 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.