கீதாஞ்சலி ராவின் புகழ் மகுடத்தில், இன்னொரு கல் ஏறியுள்ளது. இந்த வருடத்துக்கான 'டைம்ஸ் கிட்' பட்டியலில் கீதாஞ்சலிக்கும் இடம் கிடைத்துள்ளது.
ஆண்டுதோறும் டைம் பத்திரிகை, பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிடும். உலக அளவில் செல்வந்தர்கள், செல்வாக்கானவர்கள் எனப் பல துறைகளில் வெளியிடும் பட்டியலுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. அப்படியொரு சிறந்த குழந்தைகள் பட்டியலில்தான் இந்த ஆண்டு கீதாஞ்சலி ராவுக்கு இடம் கிடைத்துள்ளது. பூர்விகத்தில் இந்தியரான கீதாஞ்சலி, அமெரிக்காவின் டென்வர் பகுதியில், கொலராடோவில் வசிக்கிறார். தாயார் பாரதி, தந்தை ராம்ராவின் பின்னணியும் அவரது அறிவியல் ஆர்வத்துக்கு முக்கியக் காரணமாகும்.
நான்கு வயதிருக்கும்போது உறவினர் ஒருவர் வாங்கித்தந்த கெமிஸ்ட்ரி கிட், அவரது அறிவியல் ஆர்வத்துக்கான வாசற்கதவாக அமைந்தது. நீரில் ஈயத்தின் தாக்கத்தைக் கண்டுபிடிக்கும் கருவி, ஓபியம் போதைக்கு அடிமையானவர்களைக் கண்டுபிடிக்கும் சாதனம் எனப் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்திருக்கும் கீதாஞ்சலி, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் சமூக மாற்றத்துக்குப் பயன்படுத்துவதே தன் குறிக்கோள் என்கிறார்.
எதிர்காலத்தில் கரோனா போன்ற தொற்றுநோய்கள் மனிதனை முடக்கி அமரவைக்கவிடாமலிருக்க வழி கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார். கிட்டத்தட்ட இந்த விருதுக்கு அமெரிக்காவிலிருந்து மட்டும் 5,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களையெல்லாம் தாண்டிதான் இந்த விருதைக் கைப்பற்றியிருக்கிறார் கீதாஞ்சலி. அமெரிக்காவின் முன்னணி இளம் விஞ்ஞானி விருது, 2019-ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்ட 30 வயதுக்குக் கீழான 30 பேரில் ஒருவர் என உலகக் கவனத்தை முன்பே ஈர்த்தவர் கீதாஞ்சலி.