Skip to main content

ரிமால் புயல்; களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்!

Published on 26/05/2024 | Edited on 26/05/2024
Remal Cyclon National Disaster Response Team in the field

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ரிமால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது வங்காள தேசம் மற்றும் அதையொட்டிய மேற்குவங்க மாநில கடற்கரை இடையே இன்று (26.05.2024) நள்ளிரவு ரிமால் புயல் கரையைக் கடக்கிறது. அதாவது சாகர் தீவுக்கும் கெபுபாராவுக்கும் இடையே இந்த புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.

இதனையடுத்து மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹஸ்னாபாத் கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF - National Disaster Response Force) தயார் நிலையில் உள்ளனர்.  அதோடு உத்திர டங்க என்ற இடத்தில் உள்ள பொதுமக்களிடம் ரிமால் புயல் கரையைக் கடப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதற்கான முன்னறிவிப்புகளை வெளியிட்டனர். இது குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 2வது பட்டாலியனின் குழு ஹஸ்னாபாத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை (27.05.2024) காலை 9 மணி வரை என சுமார் 21 மணி நேரத்திற்கு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 397 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

சார்ந்த செய்திகள்