
ராஜஸ்தான் மாநிலத்தில் மாஸ்க் அணியாமல் சென்ற ஓரு நபர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலின்போது, போலீஸார் அந்நபரின் கழுத்தில் காலை வைத்து அழுத்தி அவரை கட்டுப்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்துடன் ஒப்பிடப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த முகேஷ்குமார் பிரஜாபத் என்பவர் கடந்த வியாழக்கிழமை மாஸ்க் அணியாமல் வெளியே வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த போலீஸார் அவரை மாஸ்க் அணிய அறிவுறுத்தியுள்ளனர். அப்படி இல்லையேல் அபராதம் கட்டவேண்டும் எனக் கூறியுள்ளார். அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு போலீஸாரை தாக்கியுள்ளார் முகேஷ்குமார். இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் இருவரும் இதுகுறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், முகேஷ்குமார் தொடர்ந்து தாக்கியதால், அவரைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள், அவரை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து அழுத்தியுள்ளனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணைக்குப் பின் முகேஷ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதனிடையே, தன்னைத் தாக்கியதாக முகேஷ்குமாரின் தந்தை ஏற்கனவே முகேஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.