கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி (வயது 80) உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை 4.25 மணியளவில் காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை என இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தவர் ஆவார். கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் 1970 முதல் 2021 வரை காங்கிரஸ் கட்சி சார்பாக 12 முறை வெற்றி பெற்று தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆவார்.
பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, பெங்களூருவில் இருந்து உம்மன் சாண்டி உடல் கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்த திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு உடல் சாலை வழியே கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதி ஊர்வலம் சுமார் 30 மணி நேரம் நீடித்தது. புதுப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடைபெற்ற உம்மன்சாண்டியின் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உம்மன் சாண்டியின் உடல் புதுப்பள்ளியில் உள்ள தேவாலய கல்லறைத் தோட்டத்தில் உள்ள பாதிரியார்களுக்கான இடத்தில் உம்மன்சாண்டியின் விருப்பப்படி அரசு மரியாதையின்றி நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.