
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தத்தை மூன்றாம் நபரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது ஏன்? என்பது தொடர்பான விவாதங்கள் நாட்டு மக்களிடம் இருந்தது.

இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற இருந்த வேளையில், அமெரிக்கா தான் இந்த தாக்குதலை நிறுத்தியது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். போரை நிறுத்தாவிட்டால் வணிகம் செய்யமாட்டேன் என்று கூறியதை அடுத்து இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக் கொண்டது என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது ஒட்டுமொத்த நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புகொண்டதா? என்ற கேள்வி பா.ஜ.கவினரிடையே எழுந்துள்ளது. இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், தாக்குதல் நிறுத்தத்திற்கு பின்னால் வர்த்தகம் தொடர்பான எந்த உரையாடலும் டொனால்ட் டிரம்புடன் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, ‘மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து மே 10 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்த புரிதல் வரை, இந்திய மற்றும் அமெரிக்கத் தலைவர்களிடையே இராணுவ நிலைமை குறித்து உரையாடல்கள் நடந்தன. ஆனால், வர்த்தகம் தொடர்பான எந்த விவாதமும் இடம்பெறவில்லை’ எனத் தெரிவித்தது.