
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
போர் சூழல் தணிந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அமரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து கொடுத்திருந்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ''இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் நிறுத்தம் நிரந்தரமாகவே இருக்கும் என நம்புகிறேன். அமெரிக்காவால் இந்திய-பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத மோதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. போரை நிறுத்தாவிட்டால் வணிகம் செய்ய மாட்டேன் என நான் கூறியதை அடுத்து இரு நாடுகளும் ஏற்றுக் கொண்டன. வணிகத்தை என்னைப்போல் யாரும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். சண்டை நிறுத்தும் ஒன்றே நிரந்தர தீர்வு'' என டிரம்ப் பேசியது பரபரப்பைக் கூட்டியது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்ற அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா தற்போது பதில் அளித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவிக்கையில், ''ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் பேசி தீர்க்க வேண்டிய ஒன்று. இருநாடுகள் பேசி தீர்க்க வேண்டிய விவகாரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கிய பின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதே தவிர, இந்திய-அமெரிக்க தலைவர்கள் பேசிக் கொண்டதில் வர்த்தகம் என்ற சொல் இடம் பெறவில்லை. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதை செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் யார் வேண்டுமானாலும் உறுதி செய்யலாம். இந்தியா குறிவைத்து அழித்த இடங்களை செயற்கைக்கோள் படங்கள் வைத்து ஒப்பீடு செய்யலாம். மே ஒன்பதாம் தேதி இரவு வரை இந்தியாவை மிரட்டிப் பார்க்கலாம் என பாகிஸ்தான் நினைத்து வந்தது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்ததும் மே பத்தாம் தேதி காலை அவர்களது தொனி மாறியது'' என தெரிவித்துள்ளார்.